

சென்னை,
த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் த.வெ.க. சார்பில் வி.எஸ்.பாபு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பொதுவாக தேர்தலில் வெற்றிப் பெற்றவர்களை எதிர்த்து தேர்தல் வழக்கு, தேர்தல் முடிவு வெளியாகி 45 நாட்களுக்குள் தாக்கல் செய்யவேண்டும். ஆனால், வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்கு தொடரவில்லை.
இந்த சூழலில், கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கை மு.க.ஸ்டாலின் தொடர்ந்தார். 45 நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யாததற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் விசாரித்து தீர்ப்புக்காக தள்ளிவைத்தனர். இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (வியாழக்கிழமை) காலை நீதிபதிகள் பிறப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கினை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அமர்வு இன்று (03.09.2026) உத்தரவிட்டது.
இதன்படி கொளத்தூர் தொகுதியில் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி வி பேடுகளை சரி பார்க்க உத்தரவிட வேண்டும் என்ற மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.