பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு..!

இந்த பொதுநல வழக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு..!
Published on: 

சென்னை,

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக தமிழக அரசு அறிவித்த முடிவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை கைவிடும் முடிவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐகோர்ட்டில் வழக்கு

விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக முதல்-அமைச்சர் விஜய் கடந்த ஆகஸ்டு 24-ந்தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர் கவுதமன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

48 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன

அதில், விமான நிலையம் அமைப்பதற்காக 1,700 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த ரூ.680 கோடி அரசு நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும், இதுவரை 48 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதற்கு முன்பு எந்தவிதமான தொழில்நுட்ப புள்ளிவிவரங்களும், நிபுணர் குழுவின் அறிக்கைகளும், பொருளாதார ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தடை விதிக்க வேண்டும்

மேலும், சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடும் தமிழக அரசின் முடிவை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என்றும், அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

விரைவில் விசாரணைக்கு வரும்

இந்த பொதுநல வழக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X