பொதுமக்களுக்கு முக கவசம், கிருமி நாசினி கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு - தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முக கவசம், கிருமி நாசினி பொதுமக்களுக்கு தாராளமாக கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கிற்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களுக்கு முக கவசம், கிருமி நாசினி கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு - தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்தின் நூலகராக இருப்பவர் வக்கீல் ஜி.ராஜேஷ். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், தற்போது இந்தியா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. இதை உலக தொற்றாக அமெரிக்காவும், தேசிய பேரிடராக இந்தியாவும் அறிவித்துள்ளது. கொரோனா வைரசை வளர்ந்த நாடுகளால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் நடைபெறும் உயிர் பலி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்த நோய் எளிதில் பரவாமல் இருக்க அனைவரும் முக கவசம் அணியவேண்டும். கைகளை அவ்வப்போது கிருமி நாசினியை பயன்படுத்தி சுத்தம் செய்யவேண்டும். இந்த இரு பொருளும் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைப்பதற்கு வசதியாக, மத்திய அரசு கடந்த 13-ந் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, முக கவசம் மற்றும் கிருமி நாசினியை அத்தியாவசிய பொருட்களாக, அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநில அரசும் அரசிதழ் வெளியிட வேண்டும். இதை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமாக விளம்பரம் செய்யவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இவ்வாறு மாநில அரசுகள் அரசிதழ் வெளியிட்ட பின்னர், முக கவசம் மற்றும் கிருமி நாசினி நியாயமான விலையில் மக்களுக்கு தாராளமாக கிடைக்க வேண்டும். இவற்றை யாராவது அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கி வைத்தாலோ அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கலாம். 6 மாதம் வரை தடுப்பு காவலில் சிறையில் வைக்கலாம்.

மத்திய அரசு உத்தரவிட்டும், தமிழக அரசு இதுவரை அரசிதழ் வெளியிடாமல் உள்ளது. இதனால் சென்னை முழுவதும் மருந்து கடைகளில் அத்தியாவசிய பொருட்களான முக கவசம் மற்றும் கிருமி நாசினி பொதுமக்களுக்கு தாராளமாக கிடைக்கவில்லை. எனவே, இந்த இரு பொருட்களும் தாராளமாக மக்களுக்கு கிடைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களான இவற்றை தாராளமாக பொதுமக்களுக்கு கிடைக்க வகை செய்யும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். முக கவசம், கிருமிநாசினி ஆகியவற்றை யாராவது பதுக்கி வைத்துள்ளனரா? அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனரா? என்பதையும் திடீர் ஆய்வு மூலம் கண்டறிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், இந்த வழக்கிற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நாளை (வெள்ளிக்கிழமைக்கு) தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com