

சென்னை,
சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ராஜகோபாலன் மீது ஏராளமான பாலியல் புகார் வந்ததால், இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓர் ஆண்டு சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவரது மனைவி ஆர்.சுதா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆட்கொணர்வு வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று ஆசிரியர் ராஜகோபாலனின் மனைவி சுதா, சென்னை ஐகோர்ட்டில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், தனது கணவருக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளது. அதனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஆட்கொணர்வு வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோர், ஆட்கொணர்வு வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.