லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் விமலா பணியிடை நீக்க வழக்கு: இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த விமலா, கடந்த 17-ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
விமலா
Published on
Updated on

சென்னை,

லஞ்ச ஒழிப்​புத் துறை ஆய்​வாளர் விமலா பணி இடைநீக்​கம் செய்​யப்​பட்​ட வழக்கில் இடைக்​காலத் தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

விமலா பணியிடை நீக்கம்

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த விமலா, கடந்த 17-ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சென்னை ஆலந்தூரில் செயல்படும் லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அலுவலகத்தில் அவர் பணியாற்றி வந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஐகோர்ட்டில் விமலா மனு

சென்னை பெருநகர காவல்துறையின் பாலியல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் ராஜலட்சுமி மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்ததற்குப் பழிவாங்கும் நோக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தன்னை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக விமலா குற்றம்சாட்டினார். இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த அவர், பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய கோரினார்.

இடைக்கால தடை

இந்த மனு நீதிபதி பி.டி. ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ். அய்யாத்துரை மற்றும் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் வி. சிவலிங்கம் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விமலாவின் பணியிடை நீக்க உத்தரவுக்கு ஜூலை 9-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்தார். மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

மேல் முறையீடு

இந்த நிலையில், ஐகோர்ட்டு வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தற்போது மேல் முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com