த.வெ.க. நிர்வாகியை இரும்பு கம்பியால் தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடியைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகி தாக்கப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
த.வெ.க. நிர்வாகி மீது இரும்பு கம்பியால் தாக்குதல்.
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் பகுதியில் த.வெ.க. நிர்வாகியை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பாக முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

த.வெ.க. நிர்வாகிக்கும் முன்னாள் பஞ்சாயத்து தலைவருக்கும் தகராறு

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள அம்மன்புரம், கீழப்புதுக்குடியைச் சேர்ந்த பீட்டர் (வயது 48), த.வெ.க. நிர்வாகி ஆவார். இவர் அம்மன்புரம் பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார். அந்த இடத்தில் உள்ள பொதுப்பாதை தொடர்பாக பீட்டருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரான ஞானராஜ்(65) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல்

இந்த நிலையில் சம்பவத்தன்று, அம்மன்புரம் தேவாலயம் அருகே பீட்டர் தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஞானராஜின் தம்பி மகன் ஆல்வின்(25) உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் திடீரென பீட்டரை வழிமறித்தது. அவர்கள் தாங்கள் வைத்திருந்த தடி மற்றும் இரும்புக் கம்பிகளால் பீட்டரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளி மிதித்தனர். மேலும் அவரது இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்.

6 பேருக்கு போலீசார் வலைவீச்சு

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பீட்டரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஆல்வின், ஞானராஜ் உள்ளிட்ட 6 பேரையும் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

இதனிடையே, பீட்டர் தாக்கப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com