ஆம்ஸ்ட்ராங் மனைவி, இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆம்ஸ்ட்ராங் மனைவி, இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு
Published on

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, கூட்டாளி திருவேங்கடம் உள்பட இதுவரை 22 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.

கொலை தொடர்பாக தி.மு.க., அ.தி.மு.க.,காங்கிரஸ்., பா.ஜ.க., த.மா.கா. கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வக்கீல்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் கொலைக்கான காரணம், மூளையாக செயல்பட்டவர்களின் பின்னணி இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. அதைக் கண்டறியும் வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை ஒருவர் பின் ஒருவராக போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டும், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மேலும் இந்த போராட்டத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 1,500 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com