அதிவேகமாக கார் ஓட்டிய புகாரில் மதுரை ஆதீனத்தின் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு


அதிவேகமாக கார் ஓட்டிய புகாரில் மதுரை ஆதீனத்தின் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 5 May 2025 9:49 AM IST (Updated: 5 May 2025 11:08 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே மதுரை ஆதீனம் பயணித்த கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது.

கள்ளக்குறிச்சி


கடந்த மே 3-ஆம் தேதி சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த மாநாட்டில் பங்கேற்க மதுரையிலிருந்து சென்னைக்கு மதுரை ஆதீனம் காரில் வந்துகொண்டிருந்தபோது, உளுந்தூர்பேட்டை அருகே அவர் பயணித்த கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், "என்னை திட்டமிட்டு கொலை செய்ய சதி நடந்தது" என்று தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அளித்த விளக்கத்தில், "02.05.2025 தேதி காலை மதுரை ஆதினம் மடாதிபதி சென்னைக்கு -TN 64 U 4005 Fortuner என்ற பதிவெண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, உளுந்தூர்பேட்டை சேலம் ரவுண்டானா அருகே மற்றொரு காரின் மீது இடித்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திலிருந்து பொதுமக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் இரு தரப்பினர்களும் சென்றுவிட்டனர்.

சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், மேற்படி மதுரை ஆதீனத்தின் வாகனம் அஜிஸ் நகர் மேம்பாலத்தில் செல்வதற்கு பதிலாக, அஜிஸ் நகர் பிரிவு சாலை வழியாக சேலம் ரவுண்டானா அருகே உளுந்தூர்பேட்டை மார்க்கத்தில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.

அப்போது சேலத்திலிருந்து சென்னை மார்க்கமாக சேலம் ரவுண்டானா முன்பு வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை கடந்து மெதுவாக வந்த மாருதி வாகனத்தின் மீது காலை சுமார் 9.45 மணியளவில் பக்கவாட்டில் உரசியதில் மேற்படி மாருதி வாகனத்தின் முன்பகுதியிலும் Fortuner வாகனத்தின் இடது பின்பக்கத்திலும் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.

இரு தரப்பினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிறகு, அவர்களாகவே சுமார் 10 மணியளவில் அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக மதுரை ஆதீனத்தை கொலை முயற்சி செய்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. மதுரை ஆதீனம் அவர்களும் தன்னை கொல்ல முயற்சி நடந்ததாக தெரிவித்து வருகிறார்.

முதற்கட்ட விசாரணையில், கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. மேற்படி விபத்தானது முழுக்க முழுக்க மதுரை ஆதீனம் பயணம் செய்த Fortuner வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து எனத் தெரிகிறது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனம் அதிவேகமாக சென்று இவ்விபத்தினை ஏற்படுத்தியதாக தெரியவருகிறது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக மதுரை ஆதீனமோ, அவர்களை சார்ந்தவர்களோ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எவ்வித புகாரும் இதுவரை கொடுக்கவில்லை. பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிரும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதிவேகமாக கார் ஓட்டிய புகாரில் மதுரை ஆதினத்தின் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story