

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம், வன்னிக்கோனேந்தல் பகுதியில் தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து, அவரது கடைக்கு சீல் வைத்து ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், ஊரக உட்கோட்டம், தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வன்னிகோனேந்தல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக, தேவர்குளம் காவல் நிலையத்தில் நேற்று (3.10.2026) வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேற்சொன்ன பெண்ணிடம் இருந்து 28 சிறிய பாக்கெட்டுகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மொத்தம் 420 கிராம் மற்றும் ரூ.3,900 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இவர் மீது ஏற்கனவே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக தேவர்குளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, மானூர் மண்டலம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மகாராஜன் என்பவரால், மேற்சொன்ன கடை நேற்று (3.10.2026) மாலை 6 மணிக்கு சீல் வைத்து, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனை மற்றும் பதுக்கலுக்கு எதிராக தொடர்ந்து சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.