எண்ணூர் அனல் மின் நிலைய விபத்து தொடர்பாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

எண்ணூர் அனல் மின் நிலைய விபத்து தொடர்பாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எண்ணூர் அனல் மின் நிலைய விபத்து தொடர்பாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மீஞ்சூர் அடுத்த ஊரணமேடு கிராமத்தில் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் 2 யூனிட்டுகளில் தலா 660 மெகாவாட் வீதம் 1,320 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் அங்கு சில கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி, அனல் மின் நிலையத்தின் முகப்பு பகுதியில் பணிகள் நடந்து வந்தது. இந்த பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அனல் மின் நிலையத்தின் முகப்பு பகுதியில் நேற்று நடந்து வந்த கட்டுமான பணியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது, இரும்பு கம்பிகளால் வளைவாக அமைக்கப்பட்டு இருந்த சாரம், சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன. சாரத்தில் ஏறிநின்று பணியாற்றிக்கொண்டிருந்த வட மாநில தொழிலாளர்களும் கீழே விழுந்து, இடிபாடுகளில் சிக்கினர். அவ்வாறு சிக்கியவர்களில் அசாம் மாநிலத்தை சேர்ந்த முன்னகேம்பிராய், விதையும் பிரவோத்ஷா, சுமோன் கரிகாப், தீபக் ரைஜியுங், சர்போஜித் தவுசன், பிரந்தோ சோரோங், பாபன் சோரோங், பைபிட், பீமராஜ் தவுசன் ஆகிய 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும், பலியானவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான பணி விபத்து தொடர்பாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துணை ஒப்பந்ததாரர் மீது அஜாக்கிரதையாக செயல்படுதல், உயிரிழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com