

சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் சார்பில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ இளநிலை படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து, ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையிலான கமிட்டி அரசுக்கு பரிந்துரை செய்தது.
அதை பரிசீலித்த தமிழக அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பல்மருத்துவ கல்லூரிகளில் மட்டுமல்லாமல், சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி கல்லூரிகளிலும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அரசு வழங்கியுள்ளது.
இந்த இடஒதுக்கீடு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களிடையே பாரபட்சத்தை காட்டுகிறது.
சமூக, பொருளாதார கல்வி முறையில் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் இடையே ஏற்றத்தாழ்வு இருப்பதாக கருதி இந்த இடஒதுக்கீட்டை அரசு வழங்கியுள்ளது.
பொதுவாக, அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒரு கோட்டின் கீழ்தான் வருவார்கள்.
சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பள்ளிகளில் படிக்க முடியாத மாணவர்கள்தான், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கின்றனர். எங்கள் அமைப்பின் கீழ், 2 ஆயிரத்து 200 அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்கள் உள்ளன.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்குகிறது. இந்த இருவித பள்ளிக்கூடங்களிலும் படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள், லேப்டாப், சீருடை, புத்தகங்கள் உள்ளிட்டவற்றையும் அரசுதான் வழங்குகிறது.
அப்படி இருக்கும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது என்பது மாணவர்களிடையே பாரபட்சம் காட்டுவதாக உள்ளது.
எனவே, இளநிலை மருத்துவம், பல்மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் சேவியர் அருள்ராஜ் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து, வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்குக்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர், பள்ளி கல்வித்துறை செயலாளர், உயர் கல்வித்துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணையை ஜனவரி 5-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.