

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி, ஆனந்தராஜா ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 21-ந்தேதி நடத்தப்பட்டது. ஏ, பி, சி, டி என 4 வகையான வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. இதில் ஏ பிரிவு வினாத்தாளில் தமிழ் பாடம் தொடர்பான கேள்விகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் பி பிரிவு கேள்வித்தாளில் தமிழ் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படவில்லை. அதற்கு பதிலாக உளவியல் பகுதியில் இருந்து 10 கேள்விகள் கூடுதலாக கேட்கப்பட்டிருந்தன.
4 வகையான கேள்வித்தாள்களிலும் வெவ்வேறு பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது சட்டவிரோதம். பாடப்பிரிவை தாண்டி வேறு பாடங்களில் இருந்து கேள்விகளை கேட்டதால் எங்களைப் போல பலர் முறையாக தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. எனவே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வை ரத்து செய்தும், தேர்வு முடிவை வெளியிட தடைவிதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். தமிழ் தகுதித் தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்பட்டன. தேர்வை ரத்து செய்யக்கூடாது என அரசு வக்கீல் தெரிவித்தார்.
விசாரணை முடிவில் நீதிபதி புகழேந்தி நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
சமீபத்தில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு, முந்தைய ஆண்டுகளில் நடந்த தேர்வு முறையே பின்பற்றப்படும் என அறிவிக்கப்படவில்லை. பாடத்திட்டங்களை முடிவு செய்வது என்பது தேர்வாணையத்தின் விருப்பத்திற்கு உட்பட்டது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய முறையே பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கக்கூடாது.இந்த தேர்வில் தமிழ் பாடப்பிரிவில் இருந்து குறிப்பிட்ட கேள்விகள் சேர்க்கப்படவில்லை என்றாலும் மாற்றப்பட்ட கேள்விகள் தேர்வாணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. பி பிரிவு கேள்வித்தாளில் கேட்கப்பட்ட உளவியல் பாடப்பிரிவு கேள்விகள் பாடத்திட்டத்தில் இல்லை என மனுதாரர்கள் கூறுகின்றனர்.
தேர்வு எழுத செல்பவர்கள் அனைத்து வினாக்களுக்கும் பதில் அளிக்கும் வகையில் தயாராக வேண்டும். இந்த நியமனத்தில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு ஆதரவு அளிப்பதுதான் இந்த கொள்கையின் நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்ற எதிர்காலத்தில் பிரதான தேர்வில் தமிழ் வினாக்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.இந்த பரிந்துரையை எதிர்காலத்தில் வினாத்தாள் தயாரிக்கும்போது கருத்தில் கொள்ளப்படும் என இந்த கோர்ட்டு நம்புகிறது. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.