ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மூலப்பொருள், கழிவுகளை வெளியே கொண்டுவர அனுமதி கோரி வழக்கு

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மூலப்பொருட்கள், கழிவுகளை வெளியே கொண்டு வர அனுமதி கேட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து மூலப்பொருள், கழிவுகளை வெளியே கொண்டுவர அனுமதி கோரி வழக்கு
Published on

மதுரை,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேலாளர் சுமதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தூத்துக்குடி தொழிற்பேட்டையில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் நிறுவனம் அனைத்து அனுமதியும் பெற்று தொடங்கப்பட்டது. மக்களின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு மூடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா 2-ம் அலையின்போது 2,132.64 டன் திரவ நிலை ஆக்சிஜன் மற்றும் 7,833 மெட்ரிக் கியூப் கேஸ் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக உபயோகப்படுத்திய கழிவு எண்ணெயை வெளியேற்றவும், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் எந்திரங்களை சரி செய்யவும் உள்ளூர் உயர்மட்டக்குழு மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் அனுமதி கேட்கப்பட்டது. இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

அனுமதி வேண்டும்

எனவே ஆக்சிஜன் தயாரிப்பதற்காக உபயோகப்படுத்திய எண்ணெய், மூலப்பொருட்கள், கழிவுகள் ஆகியவற்றை வெளியேற்ற அனுமதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

தொழிற்சாலையில் ஏற்கனவே இருந்த மூலப்பொருட்கள், கழிவுகள் ஆகியவற்றை வெளியே கொண்டு வரவும் அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ரூ.200 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மூலப்பொருட்களை தொழிற்சாலையில் இருந்து வெளியில் கொண்டு வந்து விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வாதாடினார்.

இதனையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்கும்படி உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 2-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com