மயிலாப்பூரில் ராஜராஜ சோழன் சதய விழா நடத்த அனுமதி கோரிய வழக்கு - காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

மயிலாப்பூரில் ராஜராஜ சோழன் சதய விழா நடத்த அனுமதி கோரிய வழக்கில் மயிலாப்பூர் காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மயிலாப்பூரில் ராஜராஜ சோழன் சதய விழா நடத்த அனுமதி கோரிய வழக்கு - காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

மாமன்னன் ராஜ ராஜ சோழனின் சதய விழாவை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே நடத்த அனுமதி கோரி ராஜ ராஜ சேனை அறக்கட்டளையின் நிறுவனர் முரளி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் சோழ பேரரரசர் ராஜ ராஜ சோழனின் சதய விழா ஒவ்வொரு ஆண்டும் பெருமையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் மாட வீதிகளில் நவம்பர் 13-ம் தேதி கொண்டாட திட்டமிட்டு, அதற்கு அனுமதிக் கோரி மயிலாப்பூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரிடம் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர்.

ராஜ ராஜ சோழனின் பெருமையை மூடி மறைக்கும் வகையில் இந்நிகழ்விற்கு அனுமதி மறுத்த மயிலாப்பூர் காவல் ஆய்வாளரின் செயல்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு, சந்தேகத்தையும் எழுப்புகிறது. எனவே நவம்பர் 13-ம் தேதி அல்லது வேறொரு நாளில் சதய விழா கொண்டாட அனுமதி வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், "மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் நெரிசல்மிக்க மாட வீதிகளில், 500 பேர் ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. எனவேதான், போலீசார் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர். இதுபோன்ற சதயவிழா சென்னையில் நடத்தப்படுவது இதுவே முதல்முறை" என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதி, "இதுவரை இல்லாமல் சென்னையில் தற்போது இந்த விழாவை நடத்த வேண்டிய அவசியம் என்ன?" என்று கேள்வி எழுப்பினார். அப்போது மனுதாரர்கள் தரப்பில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அல்லது வேறொரு இடத்தில் நடத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கபட்டது. இதையடுத்து மனு தொடர்பாக, மயிலாப்பூர் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com