

சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், ஆர்.வெங்கடராமன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னர், சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரில் விவசாயம் செய்கிறேன். பந்தநல்லூர் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வரலாறு உள்ள கிராமம். 1,500 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் கட்டிய 4 பக்கங்களும் அகழிகளை கொண்ட அரண்மனையுடன் கூடிய பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து 2016-ம் ஆண்டு முதல் நான் கொடுத்த புகார்கள் எல்லாம் அறநிலையத்துறையிடம் உள்ளது.
இந்த கோவில் சுரங்கத்தில் சுமார் 400 பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு, பல சிலைகளை ஒரு கும்பலால் கடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை இணை ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நான் புகார் கொடுத்தேன். அந்த புகாரை, குற்றச்சாட்டுக்கு ஆளான இணை ஆணையர் விசாரிக்க அறநிலையத்துறை ஆணையர் பரிந்துரைத்தார். இணை ஆணையர் மீதான குற்றச்சாட்டை அவரே எப்படி விசாரிக்க முடியும்? அதனால், முறைகேடுகள் அனைத்தையும் மறுப்பதுடன், அவற்றை மறைக்கவும் செய்தார்.
இதன் பின்னர், சிலை கடத்தல் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த இணை ஆணையர் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். இருந்தாலும் இந்த கோவில் நிர்வாகத்தில் நடந்த ஏராளமான முறைகேடுகள் விசாரிக்கவில்லை. அதனால், கோவிலின் சுரங்கம், அகழிகள் அழிக்கப்படுகின்றன. கோவில் சொத்துகள் மூலம் கிடைக்கக்கூடிய சுமார் ரூ.24 கோடி தொகை வசூலிக்கவில்லை. இதிலும் முறைகேடுகள் நடக்கின்றன.
கோவிலுக்கு சொந்தமான சொத்துகள் எல்லாம் சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. இதுபோன்ற ஏராளமான முறைகேடுகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், இந்த முறைகேடுகள் அனைத்தையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க, ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் ஆஜராகி, இந்த ஒரு கோவிலில் மட்டும் ரூ.24 கோடி வரை இழப்பு என்றால், தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் வருமானத்தில் சுமார் ரூ.50 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு மற்றும் அதில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த கோவில் மட்டுமல்ல தமிழகத்தில் பல கோவில்களின் சொத்துகளை முறையாக பராமரிக்கவில்லை. வரவு-செலவு கணக்கு தணிக்கை துறையினரால் முறையாக தணிக்கை செய்யப்படுவது இல்லை என்று ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன என்று கருத்து கூறினார்.
அப்போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் கார்த்திகேயன், இந்த மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஏற்கனவே கோவில்கள் சொத்து தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள் வருகிற திங்கட்கிழமை (நாளை) விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்குகளுடன் இந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டனர்.