அமைச்சர்களுக்கு எதிராக வழக்குகள்: நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணை

அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணை எடுத்த வழக்குகள் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
அமைச்சர்களுக்கு எதிராக வழக்குகள்: நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணை
Published on

சென்னை,

அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ .பெரியசாமி, முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி ஆகியோரை சிறப்பு கோட்டுகள் சொத்து குவிப்பு மற்றும் முறைகேடு வழக்குகளில் இருந்து விடுவித்து பல்வேறு ஆண்டுகளில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புகளை மறுஆய்வு செய்ய ஐகோர்ட்டு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்தார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்து சுப்ரீம் கோர்ட்டு, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள வழக்குகளை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முடிவு செய்ய வேண்டும் என்று கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டது.

அதே நாளில் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த்து. அப்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை படித்துப் பார்க்க வேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த வழக்கை புதன்கிழமை (நேற்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி அறிவித்திருந்தார்.

ஆனால், விசாரணை பட்டியலில் இந்த வழக்குகள் நேற்று இடம் பெறவில்லை. இதனால், தலைமை நீதிபதி உத்தரவுக்காக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காத்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்தநிலையில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ .பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணை எடுத்த வழக்குகள் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (வியாழக்கிழமை) பிற்பகலில் கடைசி வழக்குகளாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேசே விசாரிக்கலாம் என்று அனுமதி வழங்கி தலைமை தலைமை நீதிபதி உத்தரவிட்டாரா? என்ற கேள்வி வக்கீல்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com