போராட்டத்தில் ஈடுபட்ட 1,385 ஆசிரியர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

போராட்டத்தில் ஈடுபட்ட 1,385 ஆசிரியர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
‘சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சில ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று கோரி, ஆசிரியர்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்கினர்.
அந்த வகையில் மாணவர்கள் பாதிக்காத வகையில் பள்ளி அரையாண்டு விடுமுறை நாட்களில் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கடந்த 26-ந்தேதி முதல் நடத்தி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக 6-வது நாளாக நேற்று சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. நுழைவுவாயில் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 1,000 பெண்கள் உள்பட 1,500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது சிலர் முரண்டுபிடித்ததால், அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்த நிகழ்வும் அரங்கேறியது. கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள், சமுதாய நலக்கூடம், மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் 1,385 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.






