

சென்னை,
நடிகரின் கார் கண்ணாடியை உடைத்து பணம் மற்றும் நகை திருடிய வழக்கில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜலாலுதீன் (49) என்பது தெரியவந்தது.
சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயேந்திரன் வருண் (வயது 33) நடிகர். 'வனமகன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொழிலதிபரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஐசரி கணேசனின் தங்கை மகன் ஆவார்.
இவர் தனது காரை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். அந்த கார் கண்ணாடியை உடைத்து. அதற்குள் இருந்த ரூ.85 ஆயிரம், தங்க சங்கிலி, தங்க காப்பு மற்றும் ஐபோன், விலை உயர்ந்த கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்களை யாரோ மர்ம நபர் திருடிச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து ஜெயேந்திரன் வருண் அளித்த புகாரின்பேரில் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் இந்த திருட்டில் ஈடுபட்டது, சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜலாலுதீன் (49) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.பிரபல கொள்ளையனாக வலம் வந்த இவர் மீது ஏற்கனவே நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரிடம் இருந்து திருட்டுப்பொருட்கள் மீட்கப்பட்டது.