பணம் வரவு-செலவு கணக்கில் பிரச்சினை: நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

கரூரில் பணம் வரவு-செலவு கணக்கில் பிரச்சினையில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பணம் வரவு-செலவு கணக்கில் பிரச்சினை: நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
Published on

நிதி நிறுவனம்

கரூர் வெங்கமேடு அருகே உள்ள அருகம்பாளையம், பாலாஜி நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 33). இவர் வெங்கமேடு பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் வெங்கமேடு பகுதியை சேர்ந்த கவுதம் (28), ஆனந்தகுமார் (28) ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கவுதம், ஆனந்தகுமார் ஆகியோர் நிதி நிறுவனத்தின் வரவு- செலவு கணக்கில் குளறுபடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கவுதம் மற்றும் ஆனந்தகுமாரை தினேஷ்குமார் பணியில் இருந்து நீக்கி உள்ளார்.

பெட்ரோல் குண்டு வீச்சு

இந்தநிலையில் வரவு- செலவு கணக்கு தொடர்பாக கடந்த 5-ந்தேதி தினேஷ்குமாருக்கும், கவுதமிற்கும் இடையே போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பாலாஜி நகர் பகுதியில் உள்ள தினேஷ்குமாரின் வீட்டின் முன்பக்க கதவின் சுவற்றின் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். இதனால் பெட்ரோல் குண்டு வெடித்து சிதறி பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

3 பேர் கைது

இதுதொடர்பாக தினேஷ்குமார் வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வெங்கமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பகுதியினை பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தினேஷ்குமார் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் தினேஷ்குமார் வீட்டில் 3 பேர் பெட்ரோல் குண்டு வீசியது பதிவாகியிருந்தது.

இதனை வைத்து விசாரித்ததில் தினேஷ்குமார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது கவுதம், ஆனந்தகுமார் மற்றும் கவுதமின் அண்ணன் மதன்குமார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த ஆதாரத்தை வைத்து பெட்ரோல் குண்டு வீசிய கவுதம், ஆனந்தகுமார் மற்றும் மதன்குமார் ஆகிய 3 பேரையும் வெங்கமேடு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com