திருநெல்வேலியில் 2 ஆயிரம் இடங்களில் சாதிய குறியீட்டு அடையாளங்கள் அகற்றம்


திருநெல்வேலியில் 2 ஆயிரம் இடங்களில் சாதிய குறியீட்டு அடையாளங்கள் அகற்றம்
x

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் பொது இடங்களில் சாதிய அடையாளங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் சாதிய ரீதியிலான பிரச்சினைகளை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே, இது சம்பந்தமாக விழிப்புணர்வு சந்திப்புகள் நடத்தப்பட்டு வரப்படுகின்றன. சாதி ரீதியான மோதல்கள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவர்களிடம் எடுத்துரைத்து, எதிர்கால நலனை கருத்தில் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தி குற்ற செயல்கள் மற்றும் சாதிய மோதல்களை தவிர்த்து நல்வழியில் செயல்பட ஆலோசனைகள் வழங்கப்பட்டு வரப்படுகிறது.

மேலும் பள்ளி செல்லும் மாணவர்கள், சாதிய அடையாளங்களை தங்களது கைகளிலும் நெற்றியிலும் கயிறு மற்றும் பொட்டாக அடையாளப்படுத்தி செயல்பட்டு வரும் நடைமுறையை மாற்றி அவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் பொது இடங்களில் சாதிய அடையாளங்களை அகற்றும் பணியில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், மின்கம்பங்கள், பேருந்து நிறுத்தங்கள், பாலங்கள், குறுக்குப் பாலங்கள், கிராம நுழைவு/வெளியேறும் பலகைகள், பொதுச்சுவர்கள், குடிநீர் தொட்டிகள் போன்ற இடங்களில் உள்ள சாதிய வர்ண அடையாளங்கள் மாதந்தோறும் கணக்கெடுக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அவற்றை உடனடியாக அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் தீவிர நடவடிக்கையினால், இதுவரை மாவட்டத்தில் உள்ள 313 கிராமங்களில், மொத்தம் 2,115 இடங்களில் உள்ள சாதி அடையாளங்கள் வருவாய் துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story