சாதிவாரி கணக்கெடுப்பு: திமுக அரசின் சமூகநீதி துரோகம் தொடர்கிறது - அன்புமணி தாக்கு

துரோகம் செய்யும் திமுக அரசுக்கு தமிழக மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
கர்நாடகத்தில் அம்மாநில மக்களின் சமூகநீதியைப் பாதுகாப்பதற்காக கடந்த பத்தாண்டுகளில் இரண்டாவது முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. அடுத்த 15 நாள்களில் இந்தப் பணிகளை முடிக்க கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் சமூகநீதிக்கு எதிரான திமுகவின் துரோகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சுதந்திர இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை 2015-ம் ஆண்டில் பெற்ற கர்நாடகம், பத்தாண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளும் முதல் மாநிலம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது. சமூகநீதியைக் காப்பதில் கர்நாடக அரசின் அக்கறை பாராட்டத்தக்கது.
பிகார், தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி முடித்துள்ள நிலையில், தமிழகமும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அதை ஏற்க மறுத்து நான்காம் முறையாக துரோகம் செய்திருக்கிறது திமுக அரசு. திமுக அரசின் இந்த துரோகத்தை மன்னிக்க தமிழக மக்கள் இனியும் தயாராக இல்லை.
கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் அரசும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இணைந்து செயல்படுகின்றன. இப்போதும் கூட அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் மதுசூதன் நாயக் அளித்த பரிந்துரைப்படி தான் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இப்படி ஒரு பரிந்துரையை அனுப்பலாம் என்ற உணர்வு கூட இல்லாமல் ஆணையம் உறங்கிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு சமூகநீதி துரோகம் செய்வதில் தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் சாடிக்கேற்ற மூடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கர்நாடக அரசின் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு ரூ.420 கோடி செலவாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்புப் பணியில் மொத்தம் 1.75 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மொத்தம் 2 கோடி குடும்பங்களிடம் விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளன. இதே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை 8 கோடி மக்கள் கொண்ட தமிழகத்தில் மேற்கொள்ள ரூ.500 கோடி மட்டுமே செலவாகும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் தடையில்லை, நிதி தடையில்லை, பணியாளர்கள் தடையில்லை எனும் நிலையில் ஆட்சியாளர்களின் சமூக அநீதி மனநிலை மட்டுமே தடையாக உள்ளது. சமூகநீதிக்கு மீண்டும், மீண்டும் துரோகம் செய்யும் திராவிட மாடல் அரசுக்கு தமிழக மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






