சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே இட ஒதுக்கீட்டுக்கான ஒரே தீர்வு- வேல்முருகன்

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே இட ஒதுக்கீட்டுக்கான ஒரே தீர்வு- வேல்முருகன்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறினார்.

சேலத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நிர்வாகிகள் சிலர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி செய்தியாளர்களுடன் பேசியதாவது "இட ஒதுக்கீட்டுக்கான ஒரே தீர்வு, சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே. சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றால், அனைத்து மக்களுக்கும் சம நீதி கிடைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்கிறார். ஆனால் என்.எல்.சி, பரந்தூர் உள்ளிட்ட மக்கள் போராட்டம் நடத்தும் இடங்களை அண்ணாமலை எட்டிக்கூட பார்க்கவில்லை. அண்ணாமலை ஏன் இவ்வாறு பாரபட்சம் காட்டுகிறார்?

ஈழப் போராட்டத்துக்காக பாடுபட்டு உயிர்நீத்த, பிரபாகரன் பற்றி பலவாறான கருத்துகள் பேசப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை. மேலும், பிரபாகரனை மூச்சுக்கு முந்நூறு முறை நாம் தமிழர் கட்சி சீமான் கூறுவதால், அவரையும் விமர்சிக்காமல் கடந்து செல்கிறேன்.

திமுக கட்சி கொடியுடன் 2 கார்கள் பெண்களை துரத்திய விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 7 பேரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com