

மடத்துக்குளம்,
மடத்துக்குளம் தாலுகாவுக்குட்பட்ட சாளரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் கொளுத்தி வருவதால், வறட்சியின் பிடியில் சிக்கிய காலிபிளவர் செடிகளை கண்டு விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.
இப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் காலிபிளவர் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் காலிபிளவர் தினசரி உடுமலை சந்தைக்கும், விவசாயிகளின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஆனால், தற்போது இப்பகுதியில் போதிய மழை இல்லாததாலும், கோடை வெயில் போல வெயில் கொளுத்தி வருவதாலும் கடும் வறட்சி நிலவி வருகிறது.
மழை பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் வழக்கமான பாசன முறையில் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வறட்சியை சமாளிக்க, விவசாயிகள் சொட்டுநீர் பாசன முறையைப் பயன்படுத்தி காலிபிளவர் செடிகளை எப்பாடு பட்டாவது காப்பாற்ற போராடி வருகின்றனர்.
வழக்கமாக சீரான பாசன வசதி உள்ள காலங்களில், ஒரு ஏக்கருக்கு சுமார் 8 முதல் 10 டன் வரை காலிபிளவர் மகசூல் கிடைக்கும். ஆனால், தற்போது போதிய தண்ணீர் வசதி இல்லாததால் செடிகளின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பூக்கள் வழக்கமான அளவை விட மிகவும் சிறியதாகவே பூத்துள்ளன.
வழக்கமாக ஒரு காலிபிளவர் பூ 800 கிராம் முதல் 1 கிலோ வரை எடை இருக்கும். ஆனால் தற்போது வறட்சியின் காரணமாக 250 கிராம் முதல் 450 கிராம் வரை மட்டுமே எடை உள்ளது. இதனால் ஏக்கருக்கு கிடைக்க வேண்டிய மகசூல் பாதியாகக் குறைந்து, வெறும் 3 டன் வரை மட்டுமே மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
போதிய தண்ணீர் பாசனம் இல்லாமல், பூக்களின் எடை குறைவாக இருந்தபோதிலும், சந்தையில் தற்போதைய நிலவரப்படி ஒரு காலிபிளவர் பூ ரூ.30 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது. இதனால் போதிய விளைச்சலும் இல்லாமல், சந்தையில் எதிர்பார்த்த விலையும் கிடைக்காமல் சாகுபடி செய்த செலவைக் கூட எடுக்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
பயிர்களை காப்பாற்றவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் வடகிழக்கு பருவ மழை கைகொடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.