

சென்னை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் இதுவரை மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 12ம் தேதி நடைபெற இருக்கிறது. அதை கருத்தில்கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குவதாக தமிழக அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் குற்றம்சாட்டுகின்றன.
இதற்கிடையே மேலாண்மை வாரியம் அமைக்காமல், மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இன்றுடன் காலக்கெடு முடியும் நிலையில், இதுவரை எந்த வாரியமும் அமைக்கப்படவில்லை.
கால அவகாசம் முடியும் வரை பொறுத்திருப்போம் என தமிழக அரசு சார்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்றுடன் அவகாசம் முடியும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், துரைக் கண்ணு, காமராஜ், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், அரசு தலைமை வக்கீல் விஜய்நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுப்ரீம் கோர்ட்டு கெடு முடிந்து விட்டதால் அடுத்த கட்டமாக தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
ஏற்கனவே அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டனர். ஆனால் சந்திக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்பது பற்றியும் கூட்டத்தில் விவாதித்தனர்.
இந்த நிலையில் இன்று தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அ.தி.மு.க எம்பிக்கள் அருண்மொழி தேவன் , குமார் ஆகியோர் சந்தித்து பேசினர்.
பின்னர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை செல்வதால் அவரை தவிர்த்து மற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார் .
இந்த கூட்டத்தில், காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் தர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்துக்கட்சி கட்சி கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்தை எட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நாளை மறுநாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.