

சென்னை,
காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.
இந்த வழக்கை விசாரித்த நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில் காவிரி நீரில் தமிழகத்தின் பங்கு 419 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது நூறு கோடி கனஅடி) என்றும், கர்நாடகம் ஆண்டு தோறும் தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இதேபோல் மற்ற மாநிலங்களின் பங்கு எவ்வளவு? என்பதையும் நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு தங்களுக்கு பாதகமாக இருப்பதாக கூறி தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதேபோல் கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளும் நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தன. காவிரி மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை மேற்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பை வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டு இன்று பிறப்பித்த உத்தரவினால் காவிரி நடுவர் மன்றம் வழங்கியதிலிருந்து கர்நாடகாவுக்கு 14.75 டிஎம்சி நீர் கூடுதல் கிடைக்கிறது, தமிழகத்திற்கான நீர் அளவு குறைந்து உள்ளது. கர்நாடக அரசு ஏற்கனவே உத்தரவின்படி தண்ணீர் திறக்க மறுத்துவிட்ட நிலையில் இப்போதைய சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள் அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள்.
தன்னுடைய கருத்தை தெரிவித்து உள்ள நடிகர் ரஜினிகாந்த், காவிரி தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது, மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிஉள்ளார்.
இதுதொடர்பாக அவருடைய டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.