காவிரி நீர் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை - அமைச்சர் துரைமுருகன்

காவிரி நீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வதைத் தவிர தமிழக அரசுக்கு வேறு வழியில்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை - அமைச்சர் துரைமுருகன்
Published on

சென்னை,

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்றும், காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் இந்த கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்கவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரி நீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வதைத் தவிர தமிழக அரசுக்கு வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில், ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் ஆகஸ்ட் 11-ந்தேதி வரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு 53.77 டி.எம்.சி தண்ணீரை வழங்கி இருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு வழங்கி இருப்பதோ 15.79 டி.எம்.சி தான். தற்போது 37.97 டி.எம்.சி தண்ணீர் பற்றாக்குறை ஆக உள்ளது.

இதன் காரணமாக தஞ்சை தரணியில் பயிர்கள் எல்லாம் காய்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. தஞ்சை வறண்டால் தமிழ்நாடே வறண்டு போகும் என்பார்கள். கர்நாடகாவில் இருக்கும் 4 அணைகளையும் சேர்த்து மொத்த கொள்ளளவான 114.571 டி.எம்.சி.யில் 93.535 டி.எம்.சி. தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. மொத்த அளவில் 82% தண்ணீர் கர்நாடகத்தின் வசம் இருப்பில் உள்ளது.

நீர் இல்லை என்ற நிலை கர்நாடகத்திற்கு இல்லை. தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்ற மனநிலையும் கர்நாடகத்திற்கு இல்லை. எனவே சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வதைத் தவிர தமிழக அரசுக்கு வேறு வழி இல்லை. சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் வழக்கு தொடர்ந்து தண்ணீரைப் பெற்றுத் தருவோம் என்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு உறுதியாக உள்ளது."

இவ்வாறு தனது அறிக்கையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com