பூம்புகார் கடைசி அணைக்கு வந்த காவிரிநீர் : விவசாயிகள் வரவேற்பு

காவிரி நீர் இந்த கடைசி கதவனையை வந்தடைந்த பின்னர் தான் பாசனத்துக்கு நீர் திறக்கப்படும்.
பூம்புகார் கடைசி அணைக்கு வந்த காவிரிநீர் : விவசாயிகள் வரவேற்பு
Published on

திருவெண்காடு,

பூம்புகார் கடைசி அணைக்கு காவிரிநீர் வந்தது. அந்த தண்ணீரை நீர்வளத்துறை அதிகாரிகள், விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர்.

மேட்டூர் அணை

காவிரி டெல்டா பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12 -ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு போதிய மழையின்மை காரணமாக மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இதனால் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இந்தநிலையில் கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு ஓரளவு நீர்வரத்து அதிகரித்தது.

இதைத்தொடர்ந்து தமிழக முதல்- அமைச்சர் விஜய் கடந்த 1-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.

கடைசி கதவணை

இந்த தண்ணீர் தஞ்சையை அடுத்த கல்லணையை அடைந்து அங்கிருந்து கடந்த 6-ந்தேதி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு திறந்து விடப்பட்டது. கடந்த 13-ந் தேதி இந்த தண்ணீர் மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காட்டை அடைந்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி கடலோடு கலக்கும் பூம்புகார் அருகே மேலையூரில் காவிரி ஆற்றின் கடைசி கதவணை அமைந்துள்ளது.

கர்நாடக மாநிலம் குடகு மலையில் உருவாகும் காவிரி ஆறு பல நூறு கிலோமீட்டர் ஓடி மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே மேலையூரில் உள்ள இந்த கடை அணையான சட்ரஸ் வழியாக பூம்புகார் கடலில் சங்கமிக்கும்.

வரவேற்பு

ஆண்டுதோறும் மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் இந்த கடைசி கதவனையை வந்தடைந்த பின்னர் தான் பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். இந்த ஆண்டு மேட்டூரில் கடந்த 1 -ந் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மதியம் மேலையூரில் உள்ள காவிரியின் கடைசி கதவணையை அடைந்தது. காவிரி தண்ணீரில் பொதுபணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் படையலிட்டு மலர், தானியங்கள் தூவி வணங்கி வரவேற்றனர்.

இதில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சங்கர், மேலையூர் நீர்வளத்துறை உதவி பொறியாளர் சண்முகம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பெருந்தோட்டம் ஏரி

இந்த கதவணையில் நீரை தேக்கி வைத்து ஒவ்வொரு பாசன ஆறுகள், கிளை வாய்க்கால்கள், மற்றும் பெருந்தோட்டம் ஏரிக்கு முறைவைத்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் 3,057 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பெருந்தோட்டம் ஏரி பாசனத்தின் மூலம் 2,020 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பெருந்தோட்டம் ஏரிக்கு உட்பட்ட கிளை வாய்க்கால்கள், மேலையூர் பகுதியில் வாய்க்கால்களை தண்ணீர் வந்தடைந்தாலும் குறைவாக தண்ணீர் வருவதால் பாசனத்துக்கு முழுமையாக தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே முறைவைக்காமல் கூடுதல் தண்ணீரை தொடர்ந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com