வீணாக கடலில் கலக்கும் காவிரிநீர்: வெள்ளியணை குளத்திற்கு குழாய் மூலம் கொண்டு வரப்படுமா?

கரைபுரண்டு ஓடி வீணாக கடலில் கலக்கும் காவிரிநீரை வெள்ளியணை குளத்திற்கு குழாய் மூலம் கொண்டு வரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
வீணாக கடலில் கலக்கும் காவிரிநீர்: வெள்ளியணை குளத்திற்கு குழாய் மூலம் கொண்டு வரப்படுமா?
Published on

பெரியகுளம்

கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி என 2 ஆறுகள் ஓடினாலும், அதனால் பயனடையும் பகுதி மிகக்குறைவே. மாவட்டத்தின் தென்பகுதிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. எனவே மழைக்காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க சிறியதும், பெரியதுமாக பல்வேறு குளங்களை முன்னோர்கள் வெட்டி வைத்தனர். அந்த வகையில் வெள்ளியணையில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளம் உள்ளது.

இந்த குளத்தில் பருவ மழை காலங்களில் நீர் நிரம்பினால் சுற்றுப்புறங்களில் உள்ள சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளில் நீர் அதிகளவில் சுரந்து. விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தடையின்றி நீர் கிடைக்கும். ஆனால் இந்த குளம் நிறைவது பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும்.

கால்வாய் வெட்டப்பட்டது

எனவே இந்த குளத்திற்கு நீர் கொண்டு வர இப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கரூர் மாவட்டம் அமராவதியில் கலக்கும் குடகனாற்றின் குறுக்கே அணை கட்டி அதில் இருந்து, கால்வாய் வெட்டி வெள்ளியணை குளத்திற்கு நீர் கொண்டு வரவேண்டும் கோரிக்கை வைத்ததின் பயனாக, அரசு நடவடிக்கை மேற்கொண்டு திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே அழகாபுரி கிராமத்தில் குடகனாறு அணை 1976-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, அதில் இருந்து 100 கன அடி தண்ணீர் வரும் வகையில் 55 கிலோ மீட்டருக்கு வெள்ளியணை குளத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டது. ஆனால் இதுவரை ஒருமுறை கூட குடகனாற்றின் நீர் வெள்ளியணை குளத்திற்கு வந்து நிரம்பவில்லை.

கோரிக்கை

இதற்கு காரணம் திடீரென்று அதிகப்படியான நீர் அணைக்கு வரும் போது, அதில் இருந்து உபரிநீரை வெள்ளியணை குளத்திற்கு அனுப்புவதற்கு கால்வாயின் அகலம் போதாமையால் அணையின் பாதுகாப்பு கருதி ஷட்டர் திறக்கப்பட்டு அமராவதி ஆற்றில் நீர் வீணாக சென்றுவிடும். இதனால் கால்வாயை அகலப்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு தற்போது அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. ஆனாலும் இதனால் முழு பயன் கிடைக்குமா என்பது சந்தேகமே? எனவே இதற்கு மாற்றாக வெள்ளியணையில் இருந்து இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் காவிரி ஆற்றில் வெள்ள காலத்தில் ஓடும் நீரை ராட்சத குழாய்கள் அமைத்து மின்மோட்டார்கள் உதவியுடன் குளத்திற்கு கொண்டு வந்து நிரப்ப வேண்டும் என்ற மாற்று திட்டத்தை தற்போது இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையாக வைத்துள்ளனர்.அதில் ஒரு முன் முயற்சியாக தற்போது காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீரை குளத்தின் அருகே திண்டுக்கல்லுக்கு செல்லும் குடிநீர் குழாயை பயன்படுத்தி குளத்திற்கு 2 நாட்களுக்கு நீரை திருப்பிவிட அதிகாரிகள் அரசுடன் கலந்து பேசி முயன்று பார்க்கலாமே என்று எதிர்பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com