

திண்டுக்கல்,
ரூ.100 கோடி நில மோசடி தொடர்பாக பழனி முருகன் கோவில் அலுவலர்கள் உள்பட 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினர்.
பழனி அடிவாரம் பூங்கா சாலையில், தண்டபாணி சுவாமி மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கான தக்காராக ஐகோர்ட்டு உத்தரவுப்படி பழனி முருகன் கோவில் இணை ஆணையர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். எனவே முருகன் கோவில் நிர்வாகம் அந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது.
ரூ.100 கோடி மதிப்பிலான அந்த நிலம் கடந்த ஆண்டு பழனி முருக பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், அந்த நிலம் 2 பேருக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பழனி முருகன் கோவில் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பழனி அடிவாரம் போலீசில் கோவில் நிலப்பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் புகார் அளித்தார். அதன் பேரில் பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ், உடுமலையை அடுத்த பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழனி டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதையடுத்து சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் தண்டபாணி சுவாமி மடத்தின் நிலத்தை தனியாருக்கு பத்திரப்பதிவு செய்தது செல்லாது மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடியாக உத்தரவிட்டது. இதற்கிடையே அந்த நிலமோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டது.
அதன்படி நில மோசடி தொடர்பாக திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதையடுத்து மதுரை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய் தங்கம் தலைமையில் திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபு ரம், விருதுநகர் உள்பட 5 மாவட்டங்களை சேர்ந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர்.
அப்போது பழனி முருகன் கோவில் அலுவலகத்துக்கு சென்று சம்பந்தப்பட்ட நிலத்தின் ஆவணங்களை சேகரித்தனர். அதோடு தண்டபாணி சுவாமி மடத்தின் நிலத்தை பார்வையிட்டனர். பின்னர் கோவில் அலுவலர்கள், வருவாய்த் துறையினரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு சஜிதா நேற்று திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வந்தார். அதையடுத்து நில மோசடி தொடர்பாக புகார் அளித்த கண்காணிப்பாளர் முருகானந்தம் மற்றும் கண்காணிப்பாளர்கள் கணபதி, சிவநேசன், கோவில் நிலங்கள் தொடர்பான பணிகளை மேற்கொண்ட ஓய்வு பெற்ற தாசில்தார் மாரியப்பன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சின்னச்சாமி ஆகியோர் திண்டுக்கல்லுக்கு வரவழைக்கப்பட்டனர்.
அதேபோல் சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான ஆவணங்களும் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து 5 பேரிடமும் போலீஸ் சூப்பிரண்டு சஜிதா 4 மணி நேரம் விசாரணை நடத்தினார். தண்டபாணி சுவாமி மடத்துக்கு உரிய நிலத்தை விற்பனை செய்தவர்கள் மற்றும் வாங்கியவர்களுடன் தொடர்புடைய நபர்கள் குறித்து துருவி, துருவி விசாரணை நடத்தினார்.
அதேபோல் பழனி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 பேர் சென்றனர். அவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணினியில் உள்ள ஆவணங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். அதேபோல் கோவில் நிலம் மோசடியாக பத்திரப்பதிவு நடந்த நாளில் அங்கு வந்து சென்ற நபர்களை கண்டறியும் வகையில், கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டனர்.
விரைவில் நிலம் வாங்கி, விற்றவர்களிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளனர். ஆனால் நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் தலைமறைவானதாக கூறப்படுகிறது.
அதேநேரம் கடந்த 2 நாட்களாக திண்டுக்கல், பழனியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு சஜிதா திண்டுக்கல்லில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார். முதல்கட்ட விசாரணையில் போலீசாருக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்து உள்ளன.
அதன்மூலம் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அது தொடர்பாக சிலரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். அதன் முடிவில் மேலும் சிலர் சிக்குவார்கள் என்று போலீசார் கூறினர்.
இந்நிலையில் திண்டுக்கல்லில் பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் 8 சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பழனி கோவில் நிலம் மோசடியாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.