

சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பம் பகுதியில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கூறினர். இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கடந்த 16-ந் தேதி கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
அதன்பின்னர் செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் சிவசங்கர் பாபாவை போலீசார் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி அம்பிகா, அவரை 15 நாட்கள் (ஜூலை 1-ந் தேதி வரை) காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து வந்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக அவரை நேரடியாக கேளம்பாக்கம் பள்ளிக்கு அழைத்துச் சென்று நேரடியாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டர்.
அதன்படி உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்த பிறகு, இன்று கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளிக்கு சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கேளம்பாக்கம் போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளியில் சிவசங்கர் பாபாவின் அறை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதனை திறந்து போலீசார் விசாரணை நடத்தினர். அங்கு சிவசங்கர் பாபாவிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.