சி.பி.சி.ஐ.டி. போலீசார் இடைக்கால விசாரணை அறிக்கை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், ஊட்டி கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் இடைக்கால விசாரணை அறிக்கை
Published on

ஊட்டி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், ஊட்டி கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.

கோடநாடு வழக்கு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கோடநாடு வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தனிப்படை போலீசார் 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தினர்.

சம்மன்

இதைத்தொடர்ந்து கோடநாடு வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் கனகராஜ் இறந்தது குறித்து பல்வேறு சந்தேகங்களை தனபால் எழுப்பி இருந்தார். மேலும் இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினால் வாக்குமூலம் தர தயாராக இருப்பதாக கூறியிருந்தார். இதன் அடிப்படையில் வருகிற 14-ந் தேதி கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு தனபாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இடைக்கால விசாரணை அறிக்கை

இந்தநிலையில் நேற்று நீலகிரி மாவட்ட கோர்ட்டில் கோடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி ஆகிய 2 பேர் ஆஜராகினர். அரசு தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் மற்றும் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் ஆஜராகினர். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி அப்துல் காதர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை குறித்து, முழு விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படாததால் அதிருப்தி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. தரப்பில் 4 பக்கங்கள் கொண்ட இடைக்கால விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மின்னணு ஆதாரங்கள் குறித்த ஆய்வு முடிவுகள் இதுவரை கிடைக்காததால், விசாரணைக்கு அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து அடுத்த மாதம் 13-ந் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை 167 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com