சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை; அதிகாரிகள் நாளை தமிழகம் வருகை

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நாளை சி.பி.ஐ. அதிகாரிகள் 7 பேர் தமிழகம் வருகின்றனர்.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை; அதிகாரிகள் நாளை தமிழகம் வருகை
Published on

சென்னை,

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசார் நடத்திய தாக்குதலில் தந்தை-மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் முதற்கட்டமாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று மேலும் 5 காவலர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 10 பேர் மீதும் கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இது தொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. தற்போது இந்த வழக்கு குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சாத்தான்குளம் காவல்நிலையம், கிளை சிறை, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆவணங்கள், பொருட்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. விசாரணை நாளை தொடங்கப்பட இருக்கும் நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் 7 பேர் நாளை காலை சிறப்பு விமானத்தில் டெல்லியிலிருந்து மதுரை வருகிறார்கள். இதுவரை இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்டுள்ள ஆதாரங்கள் குறித்து ஆய்வு செய்த பின்னர் அவர்கள் விசாரணையை தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com