அஜித்குமார் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரியை நோட்டமிட்டு கும்பல் பின்தொடருவதாக புகார்


அஜித்குமார் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரியை நோட்டமிட்டு கும்பல் பின்தொடருவதாக புகார்
x

மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

மதுரை,

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து, மீண்டும் டெல்லி சென்றுள்ளனர். தற்போது மதுரையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பில் உள்ள அதிகாரி தொடர்ந்து விசாரித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு ஆட்டோ ஒன்றில் சிலர் கும்பலாக சி.பி.ஐ. அலுவலகம் பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரம் அங்கேயே வலம் வந்த அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.

இதுபோல் அவர்கள் 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் வந்துள்ளனர்.இதுபற்றி அந்த சி.பி.ஐ. அதிகாரி கண்டு கொள்ளவில்லை. ஆனாலும் நடந்த சம்பவம் குறித்து தங்களது மேல்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து அரசு சுற்றுலா மளிகைக்கு சென்று தங்கி உள்ளார்.

ஆனால் அதே ஆட்டோவில் வந்த 4 பேர், அரசு சுற்றுலா மாளிகையில் வந்து நோட்டம் பார்த்துச் சென்றுள்ளனர். அதை அறிந்த அந்த சி.பி.ஐ. சப்-இன்ஸ்பெக்டர், போலீசில் புகார் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆட்டோவில் வந்தவர்கள் அஜித்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள போலீஸ்காரர்களுக்கு வேண்டப்பட்டவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story