ஐ.சி.எப். என்ஜினீயர் மீதான லஞ்ச வழக்கில் சென்னை பெண் தொழில் அதிபர் உள்பட மேலும் 4 பேர் அதிரடி கைது; சி.பி.ஐ. நடவடிக்கை

சென்னை பெரம்பூர் ரெயில்பெட்டி தொழிற்சாலையில் தலைமை என்ஜினீயராக (மெக்கானிக்கல் பிரிவு) வேலை பார்த்து ஓய்வுபெற்றவர் ஏ.கே.காத்பால். இவர் மீது ஏராளமான லஞ்ச புகார்கள் கூறப்பட்டன.
ஐ.சி.எப். என்ஜினீயர் மீதான லஞ்ச வழக்கில் சென்னை பெண் தொழில் அதிபர் உள்பட மேலும் 4 பேர் அதிரடி கைது; சி.பி.ஐ. நடவடிக்கை
Published on

காத்பால் பணியில் இருந்தபோது, தனியார் நிறுவனங்களுக்கு காண்டிராக்டு கொடுப்பதில் சலுகை காட்டியதற்காக ரூ.5.89 கோடி லஞ்சப்பணம் கிடைத்ததாக தெரிகிறது. அந்த பணத்தை காத்பால் முதலில் நேரடியாக வாங்கவில்லை. சென்னையைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் ஒருவரிடம் அந்த பணத்தை கொடுத்துவைத்ததாக கூறப்படுகிறது. ஓய்வுபெற்ற பிறகு அந்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக அந்த பெண் தொழில் அதிபரிடம் இருந்து வாங்க முடிவு செய்து, முதல் கட்டமாக ரூ.50 லட்சத்தை தனது சகோதரர் மூலம் வாங்கிவிட்டாராம்.இரண்டாவது கட்டமாக ரூ.50 லட்சம் வாங்க முடிவு செய்துள்ளார். இந்த தகவல் சி.பி.ஐ. போலீசாருக்கு தெரிந்துவிட்டது. அவர்கள் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரகசியமாக விசாரணை நடத்திவந்தனர். நேற்று முன்தினம் 2-வது கட்டமாக ரூ.50 லட்சத்தை வாங்கியபோது என்ஜினீயர் காத்பாலை சி.பி.ஐ. அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

சி.பி.ஐ. போலீசார் அடுத்தகட்டமாக என்ஜினீயர் காத்பாலின் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினார்கள். டெல்லி மற்றும் சென்னையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அதில் ரூ.2.75 கோடி மற்றும் 23 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.இந்த வழக்கில் பெண் தொழில் அதிபர் உள்பட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. ஹம்சா வேணுகோபாலன்- பெண் தொழில் அதிபரான இவர், யூனிவர்சல் என்ஜினீயர்ஸ், சென்னை என்ற பெயரில் நிறுவனம் நடத்திவருகிறார்.

2. ஸ்ரீ ஓம் பிரகாஷ்- இவர் ஹம்சா வேணுகோபாலனின் தொழில் பங்குதாரர்.

3. சஞ்சய் காத்பால்- இவர் என்ஜினீயர் காத்பாலின் சகோதரர்.

4. ஸ்ரீ கேத்மால் ஜெயின்- சேலம் ஸ்டீல் டிரேடிங் கம்பெனிக்காரர்.

சி.பி.ஐ. சோதனையில் மேலும் வங்கி டெபாசிட் தொகை ரூ.4.28 கோடி உள்பட ஏராளமான சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் சிக்கி உள்ளன.

இந்த தகவல்கள் சி.பி.ஐ. வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com