கள்ளத்தனமாக விற்கும் மது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் -அன்புமணி ராமதாஸ் பேட்டி

தமிழகம் முழுவதும் கள்ளத்தனமாக விற்கும் மது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
கள்ளத்தனமாக விற்கும் மது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் -அன்புமணி ராமதாஸ் பேட்டி
Published on

தர்மபுரி,

தர்மபுரியில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திராவிட மாடல் ஆட்சியா?

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை அதிகமாக நடந்து வருகிறது. சந்துக்கடைகளில் மது விற்பனை, கள்ள மது விற்பனை என படு பயங்கரமாக நடந்து வருகிறது, இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?. தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் இறந்துள்ளனர். இந்தியாவிலேயே குடிக்கு அடிமையான மாநிலமாக தமிழகம் உள்ளது,

மது விலக்கு துறை அமைச்சர் மது விலக்கு அமைச்சராக இல்லை, மது திணிப்பு அமைச்சராக செயல்பட்டு வருகிறார். தி.மு.க. அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வரும் அமைச்சராக இருக்கிறார்.

மதுவை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வரும் ஒரே கட்சி பா.ம.க.தான். சாராயம் விற்பதில் தி.மு.க., அ.தி.மு.க. 2-ம் ஒரே நிலைதான். தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படுவதாக அரசு கூறியது. அந்த அறிவிப்பு என்ன ஆனது என்று தெரியவில்லை.

முதல்-அமைச்சருக்கு பெண்கள் மற்றும் இளைஞர்களின் நலனில் அக்கறை இருந்தால் மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி.பி.ஐ. விசாரணை

இந்தியாவில் தமிழகத்திலும், தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்திலும் டாஸ்மாக் மது, கள்ளச்சாராயம் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது. இதை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் சந்துக்கடைகள் மற்றும் கள்ளத்தனமாக விற்கும் மது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். கள்ளத்தனமாக விற்கப்படும் மது எங்கிருந்து வருகிறது. டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தெரியாமல் நேரடியாக விற்பனைக்கு வரும் அந்த மது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள மது உற்பத்தி செய்யும் ஆலைகளில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்து உள்ளது.

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com