லாவண்யா வழக்கில் ஒத்துழைக்க வேண்டும் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை கோரி மேல்முறையீடு செய்ய வேண்டாம்

லாவண்யா இறப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டதற்கு தடை கோரி மேல்முறையீடு செய்யாமல், தமிழக அரசு மிகுந்த ஒத்துழைப்பு அளித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்று தரவேண்டும் என்று பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் விஜயசாந்தி சென்னையில் கூறினார்.
லாவண்யா வழக்கில் ஒத்துழைக்க வேண்டும் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை கோரி மேல்முறையீடு செய்ய வேண்டாம்
Published on

சென்னை,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள துய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி லாவண்யா (வயது 17) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மதம்மாற கட்டாயப்படுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என கூறி பா.ஜ.க.வினர் போராட்டங்களை நடத்தினர்.

இந்தநிலையில் மதமாற்றம் தொடர்பான புகார் குறித்து விசாரிக்க பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் சித்ரா ராய் வாகு, முன்னாள் எம்.பி.யும், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினருமான விஜயசாந்தி, மத்திய பிரதேச மாநில பா.ஜ.க. துணைத்தலைவர் சந்தியா ராய் எம்.பி., கர்நாடக மாநில மகளிர் அணி தலைவி கீதா விவேகானந்தா ஆகிய 4 பேரை நியமித்து விசாரித்து வர உத்தரவிட்டார். இந்த குழுவினர் அரியலூரில் உள்ள லாவண்யா வீட்டுக்கு சென்று பெற்றோரை சந்தித்து பேசினர்.

தமிழக அரசு முழு ஒத்துழைப்பு

பின்னர் சென்னை, தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விஜயசாந்தி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவி லாவண்யா இறந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் ஒருவழிப்பாதையாக விசாரித்ததால் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குழப்பமடைந்து உள்ளார். அவருடைய உத்தரவின்படி லாவண்யாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், மாணவி சாவு குறித்த விவரங்களை பெற்றோரிடமும், அருகில் உள்ள வீடுகளிலும் கேட்டறிந்தோம்.

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்திய காவல் துறையினர் தங்கள் துறைக்கும், மாநில அரசுக்கும் அவப்பெயரை பெற்றுத்தந்து உள்ளனர். இந்த வழக்கு நியாயமாகவும், முழுமையாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும். உரிய இழப்பீடும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

அதேபோல், சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரவேண்டும்.

விசாரணைக்கு தடை

மாறாக சி.பி.ஐ. விசாரணைக்கு தடை கோரி மேல்முறையீடு செய்யக்கூடாது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க. அரசியல் செய்ய விரும்பவில்லை. தமிழகத்தில் கான்வென்டுகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற விஷயங்கள் நடப்பதாக தெரிந்தால், உடனடியாக பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழகமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். லாவண்யாவின் பெற்றோரிடம் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தும் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவிடம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கட்டாய மதமாற்ற தடை சட்டம்

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறும் போது, பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இருக்கும் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமல் என்ற விஷயம், பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களிலும் நடைமுறையில் இருக்கிறது. அதேபோன்று தமிழகத்திலும் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று சட்டசபையில் எடுத்து கூறுவேன் என்றார்.

உடன் மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com