ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை ஏற்றது சி.பி.ஐ. - புதிய வழக்கு பதிவு செய்ய ஏற்பாடு

சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு சமீபத்தில் திரும்பப் பெற்றுக் கொண்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை ஏற்றது சி.பி.ஐ. - புதிய வழக்கு பதிவு செய்ய ஏற்பாடு
Published on

சென்னை,

பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. ஏற்றுக்கொண்டது. தேவைப்பட்டால் புதிய வழக்கை பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சிறையில் இருப்பவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக செயல்பட்டவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அன்றைய தினம் இரவில் அவர் ஒரு கட்டுமானப் பணியை ஆய்வு செய்து கொண்டிருந்த சமயத்தில் மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.

இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுப் படை அமைக்கப்பட்டது. மொத்தம் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். 7,800 பக்க குற்றப்பத்திரிகையும் தயாரானது.

இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவர் மருத்துவ சிகிச்சையின்போது உயிரிழந்தார். சிலருக்கு ஜாமினும் கிடைத்தது. இந்த வழக்கை தமிழக போலீசார் நேர்மையாக விசாரிக்கவில்லை என்று ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி குறிப்பிட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் அகில இந்திய தலைவர் மாயாவதியும் சென்னைக்கு நேரில் வந்தார். இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஆனால் அப்போதைய தமிழக அரசு இதற்கு உடன்படவில்லை. எனவே ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இம்மானுவேல் சி.பி.ஐ. விசாரணை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பர் 24-ந்தேதி உத்தரவிட்டது.

இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. சுப்ரீம் கோர்ட்டும் இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு சமீபத்தில் திரும்பப் பெற்றுக் கொண்டது.

இதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சென்னை போலீசார் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் இந்த கொலை தொடர்பாக மறுவழக்கு பதிவு செய்ய உள்ளனர். மேலும் சிறையில் இருப்பவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் இனிவரும் காலங்களில் இந்த வழக்கின் விசாரணை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com