உண்மை குற்றவாளிகளை கைது செய்ய சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி

காரைக்கால் மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
உண்மை குற்றவாளிகளை கைது செய்ய சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி
Published on

மாவட்ட செயலாளர் கொலை

காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தநிலையில் அவரது குடும்பத்தினருக்கு, பா.ம.க. கட்சி தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

இதைத்தொடர்ந்து ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

தேவமணி கொலை வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். இதுவரை காரைக்கால் போலீசார் என்ன வழக்கு போட்டுள்ளனர் என்பது கூட தெளிவாக தெரியவில்லை.

சி.பி.ஐ. விசாரணை

தேவமணியின் கொலையில் பயங்கர சதி உள்ளது. அதை காவல்துறை கண்டுபிடிக்கவேண்டும். காற்று நுழைய முடியாத இடத்தில் கூட, காவல்துறை நுழையும் என்பார்கள். காவல்துறை நினைத்தால் உண்மையான குற்றவாளிகளை உடனே கைது செய்யலாம்.

தேவமணி எல்லாதரப்பு மக்களுக்கும் பாதுகாவலராக இருந்தவர். ஏழை மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் எந்நேரமானாலும் களத்தில் இறங்கி போராடும் போராளி. தேவமணியை கொலை செய்ய பல முறை திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இது காவல்துறைக்கும் தெரியும். காவல்துறையின் அலட்சியத்தால் தான் இந்த படுகொலை நடந்துள்ளது. எனவே உண்மை குற்றவாளிகளை கைது செய்ய சி.பி.ஐ. விசாரணை வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திட்டமிட்ட படுகொலை

பின்னர் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி கூறுகையில் தேவமணி படுகொலை சம்பவத்தில் போலீசாரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதுபோல் பல சம்பவங்கள் புதுச்சேரியில் நடந்த வண்ணம் உள்ளது. மக்களுக்கு பாதுகாவலராக உள்ள பலரை கொலைகார கும்பல் வெட்டி கொலை செய்து வருகின்றனர். போலீசில் பல கருப்பு ஆடுகள் உள்ளன. தேவமணியை திட்டமிட்டு படுகொலை செய்துள்ளனர். எனவே தான் நாங்கள் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல் சி.பி.ஐ விசாரணை கேட்கிறோம் என்றார்.

நிகழ்ச்சியில் வன்னியர் சங்க துணை தலைவர் ஸ்டாலின் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com