

சென்னை,
தமிழகத்தில் உள்ள 12-ம் வகுப்பு மாணவர்கள் எதிர்காலம் குறித்த மிக முக்கியமான விஷயத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். இந்தியாவில் கொரோனா பரவுவதை காரணம்காட்டி சி.பி.எஸ்.இ.யின் பிளஸ்-2 தேர்வை ரத்து செய்து கடந்த 4-ந்தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டு உள்ளது. சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை ஒருங்கிணைப்பதற்காக ஒரு குழுமம் அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை காரணமாக வைத்து எனது அரசும் பிளஸ்-2 தேர்வை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. பிளஸ்-2 மதிப்பெண்கள் தான் உயர்கல்விக்கான வாய்ப்புகளை மாணவர்களுக்கு அளிப்பதாக உள்ளது. எனவே பிளஸ்-2 மாணவர்களுக்கான மதிப்பெண்களை அளிப்பதிலும், அதை மதிப்பிடவும் ஒரு குழு அமைக்கப்படுகிறது.
இந்த மதிப்பெண்கள் தான் தொழில் கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வியில் சேர்வதற்கு அடிப்படையாக இருக்கும். மாணவர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மருத்துவ நிபுணர்களின் பெரும்பாலான ஆலோசனை அடிப்படையில் இந்த முடிவை அரசு எடுத்து உள்ளது. இந்த சூழ்நிலையில் தொழில் கல்விகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வை நடத்துவது மாணவர்களின் உடல்நலனுக்கு மிகவும் கேடு உண்டாக்குவதாக அமைந்துவிடும்.
எனவே சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வை ரத்து செய்தது போல் நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்துகிறேன். சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வை ரத்து செய்ததற்கான காரணத்தையே நுழைவுத்தேர்வு ரத்து செய்வதற்கான காரணமாகவும் எடுத்து கொள்ளலாம்.
நாங்கள் ஏற்கனவே வற்புறுத்தி வருவதை போல பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ இளநிலை பட்டம் உள்ளிட்ட அனைத்து தொழில் கல்வி இடங்களையும் எங்கள் மாநிலமே நிரப்பி கொள்வதற்கு அனுமதி அளிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமானப்பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "இந்த திட்டத்தை உடனே தொடங்கி விரைவாக முடிப்பதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் மாநில அரசு வழங்க தயாராக உள்ளது. இதில் உங்களின் தனிப்பட்ட கவனத்தை செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்." என்று கூறப்பட்டுள்ளது.