மும்மொழிக் கொள்கையை அடுத்த ஒரு வாரத்தில் செயல்படுத்த பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவு

ஒவ்வொரு மாணவரும் குறைந்தது 2 இந்திய மொழிகளையாவது கற்பது உறுதி செய்யப்படும் என கூறப்பட்டிருக்கிறது.
மும்மொழிக் கொள்கையை அடுத்த ஒரு வாரத்தில் செயல்படுத்த பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவு
Published on

புதுடெல்லி,

சி.பி.எஸ்.இ. நிர்வாகம், கல்வி முறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. அந்தவரிசையில் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டு முதல் புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, 6-ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களில் நிலையான மற்றும் விருப்பத்தேர்வான மேம்பட்ட நிலைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதில் மும்மொழிக் கொள்கையில் புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி, மாணவர்கள் படிக்கும் 3 மொழிகளில் குறைந்தபட்சம் 2 மொழிகள் இந்தியாவை சேர்ந்தவையாக இருக்க வேண்டும். பல மொழி சார்ந்த கல்வியை வாரியம் படிப்படியாக செயல்படுத்தி வருவதன் தொடர்ச்சியாக 2026-27-ம் கல்வியாண்டு முதல் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது மொழி கட்டாயமாக்கப்படும் என்றும், இதன் மூலம் ஒவ்வொரு மாணவரும் குறைந்தது 2 இந்திய மொழிகளையாவது கற்பது உறுதி செய்யப்படும் என கூறப்பட்டிருக்கிறது.

இந்த நடைமுறையில், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படித்துவிட்டு திரும்பும் மாணவர்கள், 8, 9-ம் வகுப்பு வரை தாங்கள் படித்த 3-வது மொழி உள்நாட்டு பள்ளிகளில் கற்பிக்கப்படாமல் இருந்தால், அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளின்படி, அந்த மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படலாம். இருப்பினும் அவர்கள் கல்வித் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த பாடங்களின் எண்ணிக்கையை முழுமையாககற்பது கட்டாயம் ஆகும் என சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதேபோல், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவி யல் பாடங்களில் இருநிலை தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படுவது பற்றிய விளக்கத்தையும் சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. அதில், முதலாவது தரநிலை (ஸ்டேன்டர்டு) பாடத்திட்டத்தை படித்து 80 மதிப்பெண்களுக்கான 3 மணி நேர பொதுத் தேர்வை அனைத்து மாணவர்களும் கட்டாயம் எழுதவேண்டும்.

இதில் கூடுதல் திறன் பெற விரும்பும் மாணவர்கள், கணிதம் மற்றும் அறிவியல் அல்லது இரண்டு பாடங்களிலும் மேம்பட்ட நிலையை (அட்வான்ஸ்டு) தேர்வு செய்யலாம். இது விருப்பத்தேர்வுதான். இதற்காக 25 மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேரம் தேர்வு நடத்தப்படும். அதில் பெறும் மதிப்பெண்கள் ஒட்டுமொத்த தொகுப்பு மதிப்பெண்ணுடன் சேர்க்கப்படாது.

மாறாக 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களின் மதிப்பெண் தாளில் 'மேம்பட்ட நிலைத் தகுதி' என குறிப்பிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டமைப்பின் கீழ் 10-ம் வகுப்புக்கும் முதல் பொதுத் தேர்வுகள் 2028-ம் கல்வியாண்டில் இருந்து நடத்தப் படும் எனவும் சி.பி.எஸ்.இ. கூறியிருக்கிறது.

இந்த நிலையில், மும்மொழிக் கொள்கையை அடுத்த ஒரு வாரத்தில் செயல்படுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் மொழிப்பாட புத்தகங்களுக்கு காத்திருக்காமல், 6ம் வகுப்புகளில் 3-வது மொழிப்பாடத்தை உடனடியாக பயிற்றுவிக்க தொடங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் படிப்படியாக 2030-31க்குள் 10ம் வகுப்பு வரை இக்கொள்கையை கட்டாயமாக்க சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com