

நெல்லை,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கைக்கோள்களை பொருத்தி வெற்றிகரமாக விண்ணில் ஏவி வருகிறது. மேலும் அதிக எடை கொண்ட விண்கலங்களை விண்ணில் ஏவுவதற்கும், மனிதர்களை விண்ணுக்கு அழைத்து சென்று மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதற்கும் அதிக எடை கொண்ட எல்.வி.எம்.3 ராக்கெட்டுகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் எல்.வி.எம்.3 ராக்கெட்டுக்கான சக்திவாய்ந்த சிஇ20 கிரையோஜெனிக் எஞ்சினின் உயர் சக்தி சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது. 165 வினாடிகள் நீடித்த இந்த சோதனை கடுமையான வெப்பத்தைத் தாங்கும் என்பதை நிரூபித்துள்ளது. எதிர்கால விண்வெளி பயணத்திற்கு இந்தியாவின் கனரக தூக்கும் திறன்கள் மிகவும் நம்பகமானதாக மாறி வருவதை இந்த சோதனை நிரூபிக்கிறது.
இந்த எந்திரம் 22 டன் உந்துவிசை அளவை எட்டியது. இது ஈர்ப்பு விசைக்கு எதிராக ஒரு ராக்கெட்டை மேல்நோக்கி தள்ள தேவையான சக்தியாகும். இந்த வெற்றி இந்தியாவின் கனமான ராக்கெட்டான எல்.வி.எம்-3-ன் எதிர்காலத்திற்கான ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது. இந்த வெற்றி இந்திய விண்வெளி வீரர்களை, விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் திட்ட பயணத்திற்கு நேரடியாக உதவுகிறது.