தரங்கம்பாடிக்கு சீகன்பால்கு வந்ததன் 317-ம் ஆண்டு கொண்டாட்டம்

தரங்கம்பாடிக்கு சீகன்பால்கு வந்ததன் 317-ம் ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தரங்கம்பாடிக்கு சீகன்பால்கு வந்ததன் 317-ம் ஆண்டு கொண்டாட்டம்
Published on

பொறையாறு:

தரங்கம்பாடிக்கு சீகன்பால்கு வந்ததன் 317-ம் ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சீகன் பால்கு

ஜெர்மனி நாட்டை சேர்ந்த சீகன்பால்கு 1706-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ந் தேதி கடல் மார்க்கமாக தரங்கம்பாடிக்கு வந்தார். பின்னர் தரங்கம்பாடியில் தங்கியிருந்து பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டார். தரங்கம்பாடியில் முதல் அச்சுக் கூடம், பொறையாறில் காகித தொழிற்சாலை நிறுவியது, பைபிள் வேத நூலில் புதிய ஏற்பாட்டை தமிழில் அச்சிட்டது, தமிழ் இலக்கிய நூல்களை எழுதியது, பாடசாலை ஆரம்பித்து குழந்தைகளுக்கு கல்வி போதித்தது உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப்பணிகளாற்றியவர் சீகன்பால்கு.

சீகன் பால்கு தரங்கம்பாடிக்கு வந்ததன் 317-வது ஆண்டு நிறைவு நாளான நேற்று, தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள சீகன்பால்கு நினைவிடத்தில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜ் தலைமையில், புதிய எருசலேம் ஆலய ஆயர் சாம்சன் மோசஸ் உள்ளிட்ட ஆயர்கள் முன்னிலையில் திருச்சபையினர் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

மாலை அணிவித்துமரியாதை

பின்னர், அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்து கடற்கரைக்கு அருகில் உள்ள சீகன்பால்குவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து புதிய எருசலேம் ஆலயத்தில் சீகன்பால்கு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர்வளையம் வைத்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் பொறையாறில் உள்ள தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி முதல்வர் ஜான்சன் ஜெயக்குமார், பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜான் சைமன், டி.இ.எல்.சி கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், சபை குருக்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com