மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வியை கொண்டாடுவதா? - வானதி சீனிவாசன் கண்டனம்

இந்த சம்பவம் வரலாற்றில் திமுகவுக்கும், முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கும் எப்போதும் கரும்புள்ளியாக இருக்கும் என்று கூறினார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வியை கொண்டாடுவதா? - வானதி சீனிவாசன் கண்டனம்
Published on

கோவை,

தேசிய பாஜக மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திமுக எப்போதும் சமூக நீதி, சமத்துவம் பற்றி மேடைகளில் முழங்குவார்கள். பட்டியலினத்தவர், பழங்குடியினர், பெண்கள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது தான் உண்மையான சமூக நீதி. ஆனால் அவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பதை திமுக ஒரு போதும் விரும்புவதில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை தடுத்து நிறுத்தி வருகிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சாசன சட்ட திருத்த மசோதாவை, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து தோற்கடித்துள்ளன. பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதை தடுத்து நிறுத்தியதோடு, அதை பட்டாசு வெடித்து கொண்டாடியிருக்கிறார் முதல்-அமைச்சர் ஸ்டாலின். இதற்கு எவ்வளவு கொடூர மனம் வேண்டும்? இதை செய்ய அவரது மனம் எப்படி துணிந்தது? முதல்-அமைச்சர் ஸ்டாலினை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

திமுக ஆட்சியில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது. இதை விசாரித்த முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான காவல்துறை, பட்டியலின மக்களே, தாங்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்தார்கள் என்று தீர்ப்பு எழுதியது. இந்த சம்பவம் வரலாற்றில் திமுகவுக்கும், முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கும் எப்போதும் கரும்புள்ளியாக இருக்கும்

அதுபோல, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்தது வரலாற்றில் இன்னொரு கரும்புள்ளியாக இருக்கும். தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் 23ஆம் தேதி சரியான தீர்ப்பு எழுதுவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com