பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கை ஜூலை மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் கீழ்கோர்ட்டுக்கு ஐகோர்ட்டு கெடு விதிப்பு

பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கை ஜூலை மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டுக்கு கெடு விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கை ஜூலை மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் கீழ்கோர்ட்டுக்கு ஐகோர்ட்டு கெடு விதிப்பு
Published on

சென்னை,

சென்னையைச் சேர்ந்த பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா கடந்த 2013-ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக அவரது மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் போலீசார், ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வக்கீல் பாசில், வில்லியம், கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், அய்யப்பன் உள்பட பலரை கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கை சென்னை முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டு விசாரித்து வருகிறது.

பதவி நீட்டிப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மே 31-ந்தேதியுடன் ஓய்வுபெறுவதால், அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று புகார்தாரர் மோகன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தற்போதுவரை இந்த வழக்கில் 57 சாட்சிகள், 176 ஆவணங்கள் மற்றும் 42 சான்று பொருட்களை நீதிபதி விசாரித்து உள்ளார். இந்த நீதிபதிக்கு பணி நீட்டிப்பு வழங்கும்பட்சத்தில், இந்த வழக்கின் தீர்ப்பு விரைவாக பிறப்பிக்கப்படும். புதிய நீதிபதி வந்தால் மேற்கொண்டு காலதாமதமாக வாய்ப்புள்ளது. ஏற்கனவே இந்த கொலை வழக்கை ஒரு மாதத்துக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்கவேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஊரடங்கு காரணமாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே முதலாவது செசன்சு கோர்ட்டு நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

வாய்ப்பு இல்லை

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கடந்த மே 31-ந்தேதி பிற்பகலில் விசாரித்தனர். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

வழக்கை விசாரித்த நீதிபதி தற்போது பணி ஓய்வுபெற்றுவிட்டதால், அவருக்குப் பணி நீட்டிப்பு வழங்க வாய்ப்பு இல்லை. அவர் ஓய்வுபெற்றதால் காலியாக உள்ள முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி பணியிடத்தை 15 நாட்களுக்குள் ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் நிரப்ப வேண்டும். பதவி ஏற்கும் சம்பந்தப்பட்ட நீதிபதி, தினந்தோறும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரிக்க வேண்டும். வழக்கு விசாரணையைத் தள்ளிவைக்கக் கூடாது. விசாரணையை ஜூலை மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com