

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி அருகே த.வெ.க. பெண் நிர்வாகியிடம் ரகசிய வீடியோக்கள் இருந்ததாகக் கூறப்படும் செல்போனை பறித்துச் சென்ற விவகாரத்தில், நாடகமாடிய அக்கட்சியின் மற்றொரு நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி ராஜமன்னியபுரத்தைச் சேர்ந்த சசிகுமாரின் மனைவி ரோஹிணி (வயது 35), தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த ஜூன் 26-ம் தேதி ஆறுமுகநேரி-அடைக்கலாபுரம் சாலையில் பைக்கில் நின்றபடி, த.வெ.க. உறுப்பினரான ஆலந்தலை தெற்கு தெருவைச் சேர்ந்த சிபாஸ்(28) என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் வைக்கப்பட்டிருந்த ரோஹிணியின் செல்போனை மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பினார். அவரை பிடிப்பது போல சென்ற சிபாஸ், மர்ம நபர் தப்பிவிட்டதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து ரோஹிணி அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மணப்பாடு பகுதியைச் சேர்ந்த த.வெ.க. உறுப்பினர் ரூஸ்வெல்ட்(44) என்பவருக்கும் ரோஹிணிக்கும் பழக்கம் இருந்துள்ளது. கட்சியில் பொறுப்பு வாங்கித் தருமாறு ரூஸ்வெல்ட் கேட்டு வந்த நிலையில், இருவரின் பழக்கம் தொடர்பான சில ரகசிய வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் ரோஹிணியின் செல்போனில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இது வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதிய ரூஸ்வெல்ட், செல்போனைக் கைப்பற்ற சிபாஸின் உதவிய நாடியுள்ளார். இதற்காக சிபாஸ், தனது நண்பரான உடன்குடி புனிதராஜ் என்பவரை வைத்து நாடகமாடி செல்போனைப் பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்த சிபாஸை போலீசார் கைது செய்தனர்.
செல்போனை பறித்துச் சென்ற புனிதராஜ் ஏற்கனவே வேறு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். தற்போது புனிதராஜிடம் இருந்து செல்போனை பெற்று தலைமறைவாக உள்ள த.வெ.க. உறுப்பினர் ரூஸ்வெல்ட்டை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். அவரை பிடித்த பிறகே செல்போனில் இருந்த ரகசிய வீடியோக்கள் குறித்த முழு விவரமும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.