செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம்: மத்திய அரசை கண்டித்து சென்னையில் காங்கிரசார் பேரணி

முக்கிய பிரமுகர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்டதை கண்டித்து சென்னையில் காங்கிரசார் கே.எஸ்.அழகிரி தலைமையில் பேரணியில் ஈடுபட்டனர்.
செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம்: மத்திய அரசை கண்டித்து சென்னையில் காங்கிரசார் பேரணி
Published on

சென்னை,

செல்போன் உரையாடல்களை மத்திய அரசு ஒட்டுக்கேட்டதை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலை அருகே இருந்து கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தொகை, திரவியம், ரஞ்சன்குமார், நாஞ்சில் பிரசாத் உள்பட மாவட்ட தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக கே.எஸ்.அழகிரி சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜனநாயக படுகொலை

பெகாசஸ் மென்பொருள் மூலம் மத்திய அரசு உளவு பார்த்தது ஜனநாயக படுகொலை ஆகும். என் வீட்டில் நடப்பதை இஸ்ரேல் நிறுவனம் பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி நான் வாழ்க்கை நடத்துவது. இந்தியாவின் அடிப்படை ஜனநாயகத்தையே மத்திய பா.ஜ.க. அரசு தகர்ந்துள்ளது. இந்த உளவு பார்க்கும் மென்பொருள் மூலம் யாரை வேண்டுமானாலும் உளவு பார்க்கலாம். இந்திய ராணுவ தளபதி என்ன பேசுகிறாரோ அதை இந்த மென்பொருள் உதவியுடன் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இஸ்ரேல் நிறுவனத்தால் கொடுக்க முடியும்.

இதனால் நமது ராணுவ வீரர்கள் ரத்தம் சிந்துவார்களே தவிர வெற்றி பெறுவது சிரமம். என்.எஸ்.ஓ. நிறுவனம் அரசாங்கத்துக்கு மட்டுமே சேவையாற்றும். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேரணியில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன், பொதுச்செயலாளர்கள் சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர், காண்டீபன், மகிளா கங்கிரஸ் தலைவி சுதா, நிர்வாகி சுமதி அன்பரசு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

போலீசாருடன் தள்ளுமுள்ளு

சைதாப்பேட்டையில் இருந்து தொடங்கிய பேரணியை, போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் கே.எஸ்.அழகிரியின் அறிவுரைப்படி காங்கிரசார் கலைந்து சென்றனர். இந்த பேரணியால் சின்னமலை பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com