நாமக்கல்லில் பரபரப்பு:செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

நாமக்கல்லில் பரபரப்பு:செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
Published on

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை சந்திக்க முடியாத நிலையில் வாலிபர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செல்போன் கோபுரம்

நாமக்கல்லில் மோகனூர் சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் 300 அடி உயரத்தில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு இந்த செல்போன் கோபுரத்தில் பெட்ரோல் கேனுடன் ஏறிய வாலிபர் திடீரென நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். செல்போன் கோபுரத்தின் மீது ஏறுவதற்கு முன்பு, அங்கிருந்த பொதுமக்களிடம் ஒரு மனுவையும் வழங்கினார்.

அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை சேர்ந்த சுரேஷ் (வயது 30) ஆகிய நான், கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி கார் திருட்டு வழக்கில் சேலம் மத்திய சிறையில் இருந்தேன். அப்போது தற்போதைய டி.ஜி.பி. சைலேந்திர பாபு சிறைக்கு வந்து தன்னம்பிக்கை உரையாற்றினார்.

150 அடி உயரத்தில் போராட்டம்

அதில் இருந்து நான் அவருடைய ரசிகனாக மாறி, அவரை பலமுறை நேரில் சந்திக்க முயற்சி செய்தும் முடியவில்லை. தற்போது நான் திருந்தி வாழ்வதற்கு டி.ஜி.பி.யே காரணம். அவரை சந்திக்க முடியாத நிலையில், இந்த முடிவை எடுத்து போராட்டத்தில் ஈடுபடுகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்போன் கோபுரத்தில் சுமார் 150 அடி உயரத்தில் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் நாமக்கல் போலீசாரும் சுரேசின் செல்போன் எண்ணில் தொடர்ந்து பேசி சமரசம் செய்யும் முயற்சியில் தீவிரம் காட்டினர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்பு ஒரு வழியாக சுரேஷ் கீழே இறங்கி வந்தார். இதையடுத்து போலீசார், தீயணைப்பு துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

பரபரப்பு

தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை சந்திக்க முடியாத நிலையில் வாலிபர் ஒருவர் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது. சுரேஷ் மீது வெண்ணந்தூர், ஆயில்பட்டி, மல்லசமுத்திரம், சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com