அலுவல்மொழி பயன்பாடு என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் செயலை மத்திய அரசு ஆதரிக்கக் கூடாது - ராமதாஸ்

நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது; சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
அலுவல்மொழி பயன்பாடு என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் செயலை மத்திய அரசு ஆதரிக்கக் கூடாது - ராமதாஸ்
Published on

சென்னை,

அலுவல்மொழி பயன்பாடு என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் செயலை மத்திய அரசு ஆதரிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலகங்களில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் அறிக்கைகள் இந்தியில் தான் இருக்க வேண்டும்; அவற்றுக்கு தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் பதில்களும் இந்தியில் தான் இருக்க வேண்டும்; அன்றாடப் பணிகளில் தொடங்கி அலுவலக இதழ் வரை அனைத்தும் இந்தியில் தான் இருக்க வேண்டும் என்று நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு அதன் தலைமை அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது அப்பட்டமான இந்தித் திணிப்பு ஆகும்.

இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள அலுவலகங்களிலும் இந்தி தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கூறுவது அப்பட்டமான மொழித்திணிப்பும், மொழித்திமிரும் ஆகும். இது எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கும், பிற மாநில மொழிகளுக்கும் இழைக்கப்படும் அவமானம் ஆகும். இதை அனுமதிக்க முடியாது.

கடந்த சில ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள், வானொலிகள், பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள் ஆகியவை வழியாகவும், கல்வியில் தொடங்கி கலாச்சாரம் வரை அனைத்திலும் இந்தியைத் திணிக்க முயன்று வரும் மத்திய அரசு, இப்போது நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் வழியாக இந்தியைத் திணிக்கத் துடிப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தியைத் திணிக்கும் போது அது வெறுப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்த வழிகளில் இந்தியைத் திணிக்க நடுவண் அரசு முயன்றாலும் அதை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள்.

அலுவல்மொழி பயன்பாடு என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் செயலை மத்திய அரசு ஆதரிக்கக் கூடாது. இந்தியைத் திணிக்கும் சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெறும்படி நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைமைக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com