ஒரே இந்தியா என்ற உணர்வுடன் மத்திய, மாநில அரசுகள் செயலாற்ற வேண்டும்: துணை ஜனாதிபதி

கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ‘ஒரே இந்தியா’ என்ற உணர்வில் மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரே இந்தியா என்ற உணர்வுடன் மத்திய, மாநில அரசுகள் செயலாற்ற வேண்டும்: துணை ஜனாதிபதி
Published on

புத்தகம் வெளியீடு

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 4 நாள் பயணமாக கடந்த 29-ந்தேதி சென்னை வந்தார்.இந்தநிலையில் அவர், தேசிய டாக்டர்கள் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர், சிறுநீரகவியல் துறை நிபுணர் டாக்டர் ஜார்ஜ் ஆபிரகாம் எழுதிய எனது நோயாளிகள்- எனது கடவுள் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

வெங்கையா நாயுடு பேச்சு

பின்னர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-

கொரோனா தடுப்பூசி குறித்து கிராம மக்களிடையே உள்ள தயக்கத்தை போக்க வேண்டும். தடுப்பூசி போடுவது நாடு முழுவதும் மக்கள் இயக்கமாக மாற வேண்டும். ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிக்கு மருத்துவத்துறையினர் தலைமை வகிக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தில் சமூக ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுபவர்கள் தங்களது உயிருக்கு மட்டுமின்றி, தங்களது குடும்பத்தினரையும் தவிர்க்க முடியாத ஆபத்தில் கொண்டு போய் விடுகிறார்கள் என்ற உண்மையை புரிய வைக்க வேண்டும்.

ஒரே இந்தியா

தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக ஒரே இந்தியா என்ற உணர்வுடன் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். தடுப்பூசி போட மக்களை ஊக்குவிக்கும் பணியில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்-வீராங்கணைகள் மற்றும் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு துறை பிரபலங்களும் முன்வர வேண்டும். கொரோனா பெருந்தொற்றை வென்றெடுக்க அதிவேகமாக தடுப்பூசி போட்டுக்கொள்வதே சிறந்த வழி ஆகும்.

டாக்டர்கள் கடவுள்

இந்திய மருத்துவ சங்கம், கொரோனா தொற்றால் மருத்துவத்துறையை சேர்ந்த 1,500 பேர் உயிரிழந்து இருப்பதாக கூறியுள்ளது. மனித சமூகத்துக்கு தங்களது சுயநலமற்ற சேவையை செய்துள்ள அவர்களது தியாகத்துக்கு நாடு எப்போதும் நன்றியுடன் இருக்கும். இந்த ஆண்டு டாக்டர்கள் தினத்துக்கு உயிர்காப்பவர்களை பாதுகாப்போம் என்ற கருத்துரு தேர்வு செய்யப்பட்டு

இருக்கிறது. கொரோனா பெருந்தொற்றால் இதுவரை இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள சுகாதார அவசரநிலை காலத்தில் சேவையாற்றும் நமது டாக்டர்களின் நலனையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். கடவுள் நாராயணனை போன்றவர்கள் டாக்டர்கள். அறிவுத்திறன் மற்றும் பயிற்சி பெற்றவர்களை பெற்று, இயற்கையான பலத்தை நமது தேசம்

கொண்டுள்ளது. குறுகிய காலத்தில் பாதுகாப்பான மற்றும் திறன்வாய்ந்த தடுப்பூசியையும், தனிநபர் பாதுகாப்பு கவச உடைகள், பரிசோதனை கருவிகள், செயற்கை சுவாச கருவிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாரித்த விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், டாக்டர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com