போதைப்பொருளை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு


போதைப்பொருளை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 2 Jan 2026 12:08 PM IST (Updated: 2 Jan 2026 12:52 PM IST)
t-max-icont-min-icon

முதுமையை முற்றிலுமாக தூக்கி எறிந்துவிட்டு வைகோ நடைபயணத்தை தொடங்கியுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருச்சி,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயண தொடக்க நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;

”தனது பொது வாழ்க்கையில் தமிழ்நாட்டின் குறுக்கும், நெடுக்குமாக, தனது காலடி படாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நடைபயணம் செய்தவர் வைகோ. ஒரு இளைஞருக்குரிய ஊக்கத்தையும், உத்வேகத்தையும் நாம் பார்க்கிறோம். இளைஞர்களுக்கு நல்வழி காட்டிட இந்த பயணத்தை தொடங்கியுள்ள வைகோவுக்கு வாழ்த்துகள்.

82 வயதாகிறதா? 28 வயதாகிறதா என்று சொல்லும் அளவுக்கு அவரது செயல்பாடு உள்ளது. திராவிட யுனிவர்சிட்டியில் படித்தவர் வைகோ. கலைஞருக்கு அருகே இருந்து அரசியல் கற்றவர். இந்த நடைபயணத்தில் எந்த பயன் இருக்கிறது எனக் கேட்கலாம். இப்படியான நடை பயணங்களால்தான், தலைவர்கள் மக்களிடம் எளிய முறையில் சென்று தங்களது கருத்துகளை சொல்ல முடியும். அப்போதுதான் நடைபயணத்தின் தேவையை மக்கள் பேசுவார்கள். மக்கள் பேசினால்தான் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். முதுமையை முற்றிலுமாக தூக்கி எறிந்துவிட்டு நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.

இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப்பொருளை ஒழிக்க வேண்டும். போதைப்பொருளை ஒழிக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. போதைப்பொருளால் பாதிக்கப்பட்டவர்கள் அதனை கைவிட வேண்டும். போதைப்பொருள் என்பது பெரிய நெட்வொர்க். அதனை ஒழிக்க மாநில, மத்திய அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். போதைப்பொருள் நுழைவு வாயில்களை நாம் தடுக்க வேண்டும். மாநிலம் விட்டு மாநிலம் போதைப்பொருள் கடத்தப்படுவதை மத்திய அரசு கண்காணித்து தடுக்க வேண்டும். அதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்.

திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 1 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடையவர்கள் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். சிலர் வெளிநாடுகளை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

சினிமாவில் போதைப்பொருளை ஊக்குவிக்காதீர்கள். போதை ஒழிப்பு என்பது சமூகத்தின் கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும். குழந்தைகளை பொறுப்போடு வளர்க்க வேண்டுமென பெற்றோரை கேட்டுக்கொள்கிறேன். ஆசிரியர்கள், சமூக பிரபலங்கள் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும்.

பொறுப்புள்ள பதவிகளில் இருப்பவர்களே இரு பிரிவினருக்கும் மோதல் உருவாகும் வகையில் பேசுகின்றனர். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ஆதி திராவிடர்கள் என நாட்டில் அனைவரும் அச்சத்தில் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அன்பு செய்ய வேண்டிய ஆன்மிகத்தை வைத்து வம்பு செய்கின்றனர்.

உங்களின் நோக்கம் பெரிது என்றாலும், உங்கள் உடல்நலம் பெரியது. எனவே இந்த பயணத்தை நீங்கள் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும். எனவே நீங்கள் இனி இதுபோன்ற பயணங்களில் ஈடுபட வேண்டாம். உங்கள் நலன் கருதி, உங்கள் மீதுள்ள உரிமையில் இதனை நான் தெரிவிக்கிறேன். உங்கள் நடைபயணம் வெற்றிபெற வாழ்த்துகள்.”

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story